Thursday, August 4, 2011

நோன்பு கஞ்சி! செய்முறை விளக்கத்துடன்....

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய இறைவழிபாடாகும். பகல் முழுதும் எதுவும் உண்ணாமல் இருக்கும் இவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் நோன்பு துறப்பார்கள். அச்சமயம், அவர்கள் உண்பதற்காக செய்யப்படும் கஞ்சியை நோன்பு கஞ்சி என்றழைப்பர். இந்த கஞ்சி பருகும் பதத்தில் இருப்பதில்லை. கொஞ்சம் கெட்டியாக இருக்கும். மிகவும் சுவையானது. உண்ணாவிரதத்தால் சோர்வுற்று இருப்பவர்களுக்கு உடனடி சக்தியைக் கொடுக்க வல்லது. இதையே பலமுறைகளில் செய்வார்கள். ஒரு செய்முறை இங்கே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
தேவையானவை:




  • அரிசி - ஒரு கப்



  • கடலை பருப்பு - கால் கப்



  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி



  • கோதுமை குருணை - கால் கப்



  • கொத்து கறி - 100 கிராம்



  • பெரிய வெங்காயம் - ஒன்று



  • தக்காளி - 2



  • பச்சை மிளகாய் - 5



  • மல்லித் தழை - 2 கொத்து



  • புதினா - 2 கொத்து



  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி



  • உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி



  • தேங்காய் - ஒரு மூடி



  • பட்டை - ஒன்று



  • கிராம்பு - 4



  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும். இந்த நோன்பு கஞ்சிக்கு கதம்பத் துவையல் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.
source: http://mypno.com

No comments:

Post a Comment