1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
No comments:
Post a Comment