தமிழாக்கம்: மெளலவி முஹம்மத் ரிஸ்மி ஜுனைத்
(அபூஅப்தில்லாஹ்)
“நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின்
வழிப்பாட்டு அடையாளங்களாகும். எவரேனும் (கஃபாவெனும்) அல்லாஹ்வின் வீட்டை (நாடி வந்து) ஹஜ், உம்ரா என்பவற்றை
செய்யும்போது அவ்விரண்டுக்கும் இடையிலும் தொங்கோட்டம் ஓடிவருவது அவர்கள் மீது
குற்றமில்லை.” (02: 158)
இஹ்ராம்:
இஹ்ராம்
என்பது உம்ரா / ஹஜ் செய்ய நாடுவதைக் குறிக்கிறது.
இஹ்ராமின்போது
உம்ரா செய்ய நாடுகிறேன் என்று வாயால் மொழிவது விரும்பத்தக்கதாகும்.
ஆண்கள் சுற்றி வளைத்து தைக்கப்படாத வெள்ளைக் கீழாடை (சாரண்) ஒன்றையும் மேனியை மூடிக்கொள்ள ஒரு வெள்ளைத் துண்டையும் இஹ்ராமுக்காக பயன்படுத்துவர். பனியன், கையுறை (மேஸ்), சாரண் போன்றவற்றை அணியக்கூடாது.
பெண்களுக்கு இஹ்ராமுக்கென்று சுன்னத்தான ஆடையொன்றுமில்லை. தன் அலங்காரம் வெளிப்படா வண்ணம் தனது உடம்பு முழுவதும் (சம்பூரணமாக) மறைக்கக்கூடிய எந்த நிற ஆடையும் அணிந்து கொள்ளலாம்.
அதன் பின்னர்...”லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக லாஷரீக்க லக லப்பைக் இன்னல்ஹம்த வன்நியஃமத்த லக வல்முல்க் லாஷரீகலக்” என்ற தல்பியாவின் வார்த்தைகளை கூறுவது சுன்னத்தாகும்.
தல்பியா கூறும்போது ஆண்கள் சப்தத்தை உயர்த்தி
கூறுவர். பெண்கள்
சப்தத்தை தாழ்த்திக் கொள்வர்.
காஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பித்தவுடன் தல்பியாவை
நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இஹ்ராம் அணிந்தவருக்கு (ஹராம்) தடுக்கப்பட்டவை:
மீக்காத் எனப்படும் எல்லையில் உம்ராவுக்கான இஹ்ராம் கட்டியவர் பின்வருவனவற்றை செய்வது (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.
முடி, நகம் முதலியவற்றில்
ஏதேனும் ஒன்றை நீக்குவது. எனினும் அவனுடைய நாட்டமின்றி அதிலேனும் விழுந்தால்
அல்லது மறதியாகவோ அறியாமையினாலோ நகம்,
முடி இவற்றை நீக்கினால் அது குற்றமில்லை.
இஹ்ராம்
அணிந்தவர் உடலிலோ உடையிலோ மணம் பூசலாகாது.
இஹ்ராம் அணியும் முன்பு உடலில்
பூசிக்கொண்ட மணம் ஏதாவது எஞ்சியிருந்தால் குற்றமில்லை. ஆடையிலிருப்பின்
அதை கழுவ வேண்டும்.
எந்த ஒரு முஸ்லிமான ஆணோ பெண்ணோ இஹ்ராமுடனோ அல்லது இஹ்ராம் இன்றியோ ஹரத்தின் எல்லையினுள் எந்த ஒரு பிராணியையும் வேட்டையாடுவதோ அதற்காக எத்தனிப்பதோஅல்லது துணை நிற்பதோ கூடாது.
இஹ்ராம் கட்டிய நிலையிலோ அது இன்றியோ ஒரு முஸ்லிம் ஹரத்தின் எல்லையில் தானாக வளர்ந்துள்ள மரம், புற்பூண்டு போன்றவற்றை வெட்டவோ பிடுங்கவோ கூடாது.
இஹ்ராமுடனோ
அது அல்லாமலோ எந்த ஒரு முஸ்லிமும் அறிவித்தல் செய்யும் நோக்குடனேயன்றி ஹரத்தின்
எல்லையில் காணப்படும் தங்கம், வெள்ளி,
நாணயம் போன்றவற்றை பொறுக்கியெடுக்கலாகாது.
இஹ்ராம் அணிந்தவர் தனக்கோ அல்லது பிறருக்காகவோ திருமணபேச்சில் ஈடுபடுவதோ மணமுடிப்பதோ கூடாது. அவ்வாறே உடலுறவில் ஈடுபடுவதோ அதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்வதோ ஹராமாகும். “இஹ்ராம் அணிந்தவன் மணம் புரியவோ மணம் புரிந்து கொடுப்பதோ அல்லது அதற்கான பேச்சில் ஈடுபடுவதும் ஆகாது. (முஸ்லிம்)
இஹ்ராம் அணிந்த பெண் கையுறை (மேஸ்) அணிவது முகம் மூடுவது கூடாது. அந்நிய ஆடவர் முன்னிலையில் முகமூடி, முக்காடு எனபன மூலம் மூடிக்கொள்ள வேண்டும்.
இஹ்ராம்
கட்டியவர் இஹ்ராம் ஆடையால் அல்லது தலையோடு ஒட்டி நிற்கும் தொப்பி, தலைப்பாகை சால்வை
போன்றவற்றால் தலையை மூடக்கூடாது. மறதியாகவோ அல்லது அறியாமையாலோ செய்தால் ஞாபகம்
வரும்போது அல்லது அதன் சட்டத்தை அறியும்போது அதை நீக்கிவிட வேண்டும். அதற்காக
அவருக்கு பரிகாரம் (ஃபிதியா) எதுவும் கடமையில்லை.
இஹ்ராம் அணிந்தவர் முழு உடம்பையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ மறைக்க சுற்றிவளைத்து தைத்த ஆடையை அணியக்கூடாது. நீண்ட ஜிப்பா, கமீசு, சிர்வால், மேஸ் முதலியனவும் இதில் அடங்கும். ஒன்றுமே கிடைக்காத பட்சத்தில் இவற்றை அணிந்துக் கொள்ளலாம்.
இஹ்ராம்
அணிந்தவருக்கு (ஹலால்) அனுமதிக்கப்பட்டவை:
கைகடிகாரம்
(வாட்ச்)அணிதல்
மூக்குக்
கண்ணாடி அணிதல்
தலையில்
பொருட்களை சுமத்தல்
தலை, உடம்பு முதலியவற்றை
கழுவுதல், தன்னை அறியாமல் முடி உதிர்வது குற்றமில்லை, மறதியாக அல்லது
அறியாமையால் தலையை மூடிக்கொண்டால் குற்றமில்லை.
காதில்
போடப்படும் ஒலிவாங்கி (ஹெட்ஃபோன்,
புளூ டூத்) அணிதல்.
இடுப்புப்
பட்டை (பெல்ட்) அணிதல்.
தலையிலே
படுக்கையை சுமத்தல்.
மோதிரம்
அணிதல்.
குடைப்பிடித்தல்.
காயத்துக்கு
மருந்து கட்டுதல், இஹ்ராம் ஆடையை மாற்றுதல், கழுவுதல் போன்ற
அனைத்தும் இஹ்ராம் அணிந்தவருக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.
பாதணி
(செருப்பு, ஸ்லிப்பர்) அணிதல்
தவாஃப் செய்தல்:
உம்ரா செய்பவர் மக்கா சென்றடைந்ததும்...
குளிப்பது விரும்பத்தக்கதாகும் (குளிக்காமல் சென்றாலும் குற்றம் கிடையாது) அதன் பின் மஸ்ஜிதுல் ஹராம் செல்வார்.
வலதுக்காலை முன்வைத்து மஸ்ஜிதுல் ஹராமிலே நுழைவார். அப்படி நுழையும்போது சுன்னத்தான பின்வரும் துஆவை ஓதுவார்... அவூதுபில்லாஹி அளீம் வ வஜ்ஜிஹில் கரீம் வ சுல்தானில் கதீம் மினஷ் ஷைத்தானிர்ரஜீம் அல்லாஹும்ம வஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக்
(மாண்புமிகு அல்லாஹ்வைக் கொண்டும் அவனது பூர்வீக
அதிகாரத்தைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல்
தேடுகிறேன்.)
அதனையடுத்து தவாஃபை ஆரம்பிப்பதற்காக காஃபாவின் அருகில் செல்வார். உம்ரா செய்யும் ஆண் தனது வலது தோள்புஜம் வெளிப்படும் வண்ணம் இஹ்ராம் ஆடையின் மேல் அங்கியின் நடுப்பகுதியை வலது அக்குளுக்கு கீழாக போட்டுக் கொள்ளவேண்டும். (தனது மேனியில் போட்டுள்ள இஹ்ராம் ஆடையின் இரண்டு தொங்கலும் இடது தோளில் நிற்கும் வண்ணம் அமையும்).
பிறகு தவாஃபை ஆரம்பம் செய்வார். ஹஜருல் அஸ்வதிலிருந்து அது ஆரம்பமாகும். முடியுமாயின் ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்வார். மனிதர்களை முட்டி மோதிக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டும் ஏசிக்கொண்டும் நெருங்காமல் பார்த்துக்கொள்வார். அவ்வாறு செய்வது தவறாகும். அவ்வாறு செய்வதன் மூலம் ஏனைய முஸ்லிம்கள் நோவினையடைகின்றனர். தவாஃபின் முதல் சுற்றை ஆரம்பிக்கும்போது “பிஸ்மில்லாஹ் அல்லாஹ் அக்பர்” என்று ஹஜருல் அஸ்வத்தின் பக்கம் சைகை செய்வது போதுமானதாகும்.. பின்பு ஓவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை கடந்து செல்லும்போது அதை நோக்கி “அல்லாஹ் அக்பர்” என்று சைகை செய்வது போதுமானது.
மேலும் அதனை கடந்து செல்லும்போது அங்கே நின்று ஏனையோருக்கு இடைஞ்சல் கொடுக்கவோ தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவோ கூடாது.
ருக்னுல் யமானியை சென்றடையும்போது முடியுமாயின் அதை தொடுவதுடன் சிலர் செய்வதுபோல் தொட்ட கையை முத்தமிடமாட்டார். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறு செய்கின்றனர். ருக்னுல் யமானியை தொட முடியாது போனால் கையால் சைகை செய்யவோ தக்பீர் சொல்லவோ வேண்டிய அவசியமில்லை. தவாஃபை தொடர்வார். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் பின் வரும் துஆவை ஓதுவார்..... ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா வபில் ஆஹிரத்தி ஹஸனதன் வகினா அதாபன்னார் (என் இறைவனே! இவ்வுலகில் நல்லதையே தந்தருள்வாயாக மேலும் மறுமையிலும் நல்லதையே தந்து எங்களை நரக நெருப்பின் தண்டனையிலிருந்து பாதுகாப்பாயாக).
இவ்வாறே உம்ரா செய்பவர் காஃபாவை ஏழுமுறை தவாஃப் செய்து முடிப்பார். ஹஜருல் அஸ்வதில் ஆரம்பிக்கும் அவ்விடத்திலேயே தவாஃபை முடித்துக் கொள்வார். தவாபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களிலும் நெருக்கமான காலெட்டை (நடையை) வைத்து அவசரமாகச் செல்வார்.
தவாஃப் முடிந்ததும் செய்ய வேண்டியவை:
தவாஃப் முடித்துக் கொண்டதும் பின்வருவனவற்றை செய்வார்:
வலது
தோள் புயத்தை மூடிக்கொள்வார்.
முடியுமாயின்
மகாமு இபராஹிமுக்கு பின்னால் நின்று இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுவார். அதற்கு
முடியாவிடின் மஸ்ஜிதுல் ஹராமின் எப்பகுதியிலும் அதனை நிறைவேற்றலாம். அது முஅக்கதாவான
ஒரு சுன்னாஹ் ஆகும். முதலாவது ரக் அத்தில் சூரத்துல் பாத்திஹாவை
தொடர்ந்து சூரத்துல் காஃபிரூனை (குல் யா அய்யுஹல் காஃபிரூன்) யும் இரண்டாவது ரக்
அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்கு பின் சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு அஹது) யும் ஓதுவார். வேறு பிற சூராக்களை
ஓதுவதும் தவறல்ல.
தவாஃபின் போது அவதானிக்கப்பட வேண்டியவை:
தவாஃப் செய்யும்போது சிலர் ஹிஜ்ர் இஸ்மாயீல் வழியாக தவாஃப் செய்கின்றனர். அதுவும் காஃபாவின் கட்டடத்தை சேர்ந்த்தாகும். எனவே அதற்கு வெளியிலே தவாஃப் செய்வது அவசியமாகும்.
காஃபாவின்
அனைத்து மூலைகள், அதன் திரை,
அதன் கதவு, என்பவற்றை தொட்டு
முத்தமிடுகின்றனர் இவையனைத்தும் கூடாததாகும். இஸ்லாமிய
மார்க்கத்தில் அடிப்படையே அற்ற நூதனங்கள் எனப்படும் பித்அத்துகளாகும் இவைகளை நபி
(ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம்) அவர்கள் செய்ய வில்லை.
தவாஃபின்போது ஆண், பெண் முண்தியடித்து நடந்து கொள்ளலாகாது. குறிப்பாக ஹஜருல் அஸவத், மகாமு இப்ராஹிம் உள்ள பக்கம் நெருங்கி செல்லலாகாது.
ஸயீ செய்தல்:
தவாஃபை முடித்துக் கொண்டவர் ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஏழு முறை போய் வருவார். இது தொங்கோட்டம் (ஸயீ) எனப்படுகிறது. “இன்ன ஸபா வல்மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்” “நிச்சயமாக ஸஃபா மர்வா என்பன அல்லாஹ்வின் சன்மார்க்க அடையாளங்களை சேர்ந்தவையாகும் (02:158) என்ற அல்குர்ஆன் வசனத்துக்கு ஏற்ப ஸயீயை ஸஃபா மலைக் குன்றிலிருந்து ஆரம்பிப்பார்.
பின்பு
முடியுமாயின் ஏறி நின்று கிப்லாவை முன் நோக்கி அல்லாஹ்வை புகழ்ந்து மூன்று
விடுத்தம் தக்பீர் சொல்லி கைகளை உயர்த்தி அதிகமதிகமாக துஆ கேட்பார். “லா இலாஹ இல்லல்லாஹு வஹதஹு லா ஷரீக்க லஹு லஹுல்
முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தா அன்
ஜஸ வஃதா வ நஸர அப்தா வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு”.
(அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துகுரியவன் யாருமில்லை ஆட்சியுரிமைகள் அனைத்தும் அவனுக்கே உரியன. மேலும் சர்வப்புகழும் அவனுக்கே! அனைத்துப்பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன். அல்லாஹ்வன்றி வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை அவன் தனித்தவன் தனது வாக்கை உறுதிபடுத்தி நிறைவு செய்தவன் தனது அடியாருக்கு வெற்றி அளித்தவன் தனித்து நின்றே எதிரிகளின் பட்டாளங்களை தோல்வியுறச் செய்தவன்)
இதனை
மூன்று விடுத்தம் ஓதுவார் அத்துடன் தாம் விரும்பிய துஆக்களை கேட்பார். அதை விட சுருக்கிக்
கொள்வதும் பிழையில்லை. துஆ ஓதும்போது மட்டுமே கையை உயர்த்துவார். (அவ்வாறு தக்பீர்
சொல்லும்போது கையால் சைக்கினை செய்யமாட்டார்.)
ஹஜ்ஜூ உம்ரா செய்பவர் தம் கைகளால் சைகை செய்வது பரவலாக காணப்படும் தவறுகளாகும்.
பின்னர் ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடப்பார். தனக்கும் தன் குடும்பத்தவர்க்கும் பிற முஸ்லிம்களுக்காகவும் துஆ கேட்பார்.
பச்சை
நிறத் தூணை அடைந்ததும் தன் உடலை குலுக்கியவாறு ஓட்டமும் நடையுமாக வேகமாக செல்வார். இரண்டாவது பச்சை
நிறத்தூண் வரை இவ்வாறே செல்வார். (இது ஆண்களுக்கு மட்டுமே)
மர்வா:
மர்வாவை
சென்றடைந்ததும் கிப்லாவை நோக்கி நின்று ஸஃபா மலைக்குன்றில் ஓதிய அல்குர்ஆன்
வசனங்களை தவிர்த்து ஏனைய ஓதல்களை ஓதுவார்.
விரும்பிய துஆக்களை ஓதுவார். பின்னர்
மலையிலிருந்து இறங்கி பச்சைத் தூண் வரை நடந்து சென்று அந்த தூணுக்கும் இரண்டாவது
தூணுக்கும் இடையே தொங்கோட்டமாக ஓடி தூணைத்தாண்டியதும் நடையாக சென்று ஸஃபா மலையில்
ஏறுவார். இவ்வாறு
ஸஃபாவிருந்து மர்வா செல்வது ஒரு சுற்றாகவும் மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு செல்வது
இன்னொரு சுற்றாகவும் கணக்கிடப்படும்.
ஸயீ செய்வோர் நடந்து செல்ல இயலாதபோது அல்லது உடல் சுகவீனம் இருந்தால் சக்கர நாற்காலியில் (வீல்சேர்) அமர்ந்து ஸயீ செய்வது குற்றமில்லை.
ஹைளு
(மாத
விடாய்), நிஃபாஸ் (பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கு) உள்ள பெண்கள் ஸயீயை
நிறைவேற்றலாம். ஸயீ செய்யப்படும் இடம் மஸ்ஜிதுல் ஹராமாக
கணிக்கப்படுவதில்லை.
பெண்கள் இரண்டு பச்சைத் தூண்களுக்கு இடையில் தொங்கோட்டம் ஓதுவது பரவலாக காணப்படும் தவறுகளை சேர்ந்த்தாகும்.
தலை முடி களைதல்:
ஸயீயை முடித்துகொண்டதும் முடியை சிரைத்துக்கொள்வார் அல்லது குறைத்துக் கொள்வார். அப்படிக் குறைத்துக்கொள்பவர் தலை முழுவதிலுமிருந்தும் குறைத்துக் கொள்வார்.
பெண்கள் தம் தலை முடியை விரல் நுனி அளவுக்கு கத்தரிப்பர்.
இத்துடன்
உம்ராவின் செயல்கள் நிறைவு பெறும். இதன் பின்னர் இஹ்ராம் கட்டியதன் மூலம்
தடுக்கப்பட்ட அனைத்தும் உம்ரா செய்தவருக்கு அனுமதியாகின்றன.
No comments:
Post a Comment