நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர்.
இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி). நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்’
பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
No comments:
Post a Comment