Saturday, July 9, 2011

ரமளான் எத்தனை நாட்கள்? அதில் சலுகைகள் யார் யாருக்கு..?

ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான். எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)
எண்ணப்படும் நாட்கள் என்பது 29 நாட்களாகவோ, 30 நாட்களாகவோ இருக்கலாம். துவக்கத்திற்கும் முடிவுக்கும் பிறைப் பார்த்தாக வேண்டும்.பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். (அனைத்து நபிமொழி நூட்களிலும் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

சலுகையளிக்கப்பட்டவர்கள்.
மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.

1)நோயாளிகள்.

நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.

ஏமாறுவது நாமே!

இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து 'தான் நோயாளி' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.

தொடர் நோய்.

முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது 'அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.

தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.

கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும்.

அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.

பிரயாணிகளுக்கு சலுகை.

நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.

அன்றைய பிரயாணம் - இன்றைய பிரயாணம்.

பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது.

பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).

இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர்.

பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம்.

நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும்.

நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது.

நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது

No comments:

Post a Comment