Friday, August 5, 2011

ஸஹர் நேரத்து உணவு...


...வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிரிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!... திருக்குர்ஆன் 2:187 

சூரியன் உதித்து தனது ஒளிக் கதிர்களை இலேசாக வெளியாக்கும் போது தான் இரவு என்ற கருப்பு நூல் மறைந்து வெளிச்சம் என்ற வெள்ளை நூல் வெளிவரும் ஆனாலும் நம்முடைய முன்னோர்கள் அர்த்தமற்ற நவைத்து ஸவ்ம கதின் என்ற பாடத்தை மனனம் செய்து வைத்துக் கொண்டு இரவு மூன்று மணி என்ற வரையறையை ஏற்படுத்திக்கொண்டு ஸஹர் உணவு உண்டு விட்டு உறங்கி விடுபவர்கள் இன்றும் அதிகம் உள்ளனர். 

திருமறைக்குர்ஆனில் இறைவன் ஒரு சட்டத்தைக் கூறி அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்வடிவம் கொடுத்தப்பின்னர் அதற்கு வேறொரு செயல்வடிவம் கொடுத்து செயல்படுவர்களின் மார்க்க் அமல்கள் இறைவனிடம் நிராகரிக்கப்பட்டுவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்'' நூல்: முஸ்லிம் 3541

நோன்பு என்பதே மனிதன் தன்னை தூய்மை படுத்திக் கொள்வதற்காக அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருட்கொடையாகும். அதிலும் தங்களது கை சரக்குகளைப் புகுத்தி கலங்கப்படுத்தி விட்டால் எப்படி அதில் நம்மை தூய்மை படுத்திக் கொள்வது ? 

அல்லாஹ் கூறிய விதம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் ரமலானை அணுகினால் தான் நம்மை தூய்மைப் படுத்தி கொள்ள முடியும் ! 

அந்த நேரம் எதுவரை ?

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார். நூல். புகாரி 1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.


இதுதான் அல்லாஹ் கூறிய வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை என்ற வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரையறுத்துக் கொடுத்த நேரமாகும். 

ஸஹர் உணவு உண்பது சிறந்தது 


''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1923.

சாதாரண நாட்களில் காலையில் உண்ணக் கூடிய உணவு மூன்று அல்லது நான்கு மணி நேரமே தாக்குப்பிடிக்கும் லுஹர் தொழுது முடித்ததும் வேகமாக எழுந்துச் சென்று சாப்பாட்டில் அமர்ந்து விடும் அளவுக்கு பசி ஏற்பட்டு விடும்.

ஆனால் நோன்பு நாட்களில் அதிகாலை உறக்கத்தில் எழுந்து அவ்வளவாக உண்டிருக்க மாட்டோம் ஆனாலும் அது மக்ரிப் வரை தாக்குப்பிடிக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம் அதனால் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த மாதம் முழுவதையும் அருள் வளம் மிக்க மாதம் என்று வர்னித்துக் கூறினார்கள். இறைவன் நாடினால் நாம் ஸஹர் நேரத்து உணவு உண்டு அல்லாஹ்வின் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முயற்சி செய்வோம்.

இறைவனும், இறைவனின் தூதரும் கூறிய விதம் கூறிய நேரத்தில் ஸஹர் செய்வதன் மூலமாகவே ஃபஜ்ரு தொழுகையும் ஜமாத்துடன் நிறைவேற்றும் பாக்கியம் கிடைக்கிறது. 

ஸஹர் செய்வது தவறினாலோ அல்லது மூன்று மணிக்கு ஸஹர் செய்து விட்டு உறங்கி விட்டாலோ ஃபஜ்ரு தொழுகை தவறி விடும் துர்பாக்கிய நிலை நன்மைகளை அறுவடை செய்யும் ரமலான் மாத்தில் ஏற்பட்டு விடக்கூடாது.

எழுதியபடி எம்மையும், வாசித்தபடி உங்களையும் அமல் செய்யம் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 

No comments:

Post a Comment