Friday, July 22, 2011

நோன்பாளி செய்யக் கூடியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..


ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).


இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).  


‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).


ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:


அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).


ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:


பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.


‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).


‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).


நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

thanks: islamkalvi.com

No comments:

Post a Comment